திருமூலர் அருளிய திருமந்திரம்
பத்தாம் திருமுறை
நான்காம் தந்திரம்
1. சித்த ஆகமம்
884
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.
1
885
ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே.
2
886
தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே.
3
887
ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவரத் தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே.
4
888
தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து
தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில்
தாண்டவக் கூத்துததனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.
5
889
தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே.
6
890
தராதல மூலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமசி வாயந்
தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்
தராதல யோகம் தயாவாசி யாமே.
7
891
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.
8
892
ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு
ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே.
9
893
படுவது இரண்டும் பலகலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.
10
894
வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.
11
895
அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அமலம் திருக்கூத்து ஆமிடம் தானே.
12
896
தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.
13
897
தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.
14
898
இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.
15
899
ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.
16
900
இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே.
17
901
தானே தனக்குத் தகுநட்டம் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.
18
902
நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும்
நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்துலயம்
நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே.
19
903
செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில்
செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம்
செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச்
செம்பொன் ஆன திருஅம் பலமே.
20
904
திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருஅம் பலமாக ஈராறு கீறித்
திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்
திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே.
21
905
வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே.
22
906
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாகும் வல்லோர்க்கு உடம்பு பொற் பாதமே.
23
907
பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்
பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும்
பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே.
24
908
சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயத்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே.
25
909
சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல்
சூக்கும மான வழியிடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதுஆ னந்தமே.
26
910
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஏ-ஓம் என்று அறைந்திடும்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்-ஹிரீம்-அம்-க்ஷம்-ஆம் ஆகுமே.
27
911
மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியாம்
மேனி இரண்டும் ஊ-ஆ-ஈ-ஏ-ஓ என்று
மேனி இரண்டும் ஈ-ஓ-ஊ-ஆ-ஏ கூத்தாமே.
28
912
கூத்தே சிவாய நமமசி வாயிடும்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவாய நம வாயிடும்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவயநம வாயிடும்
கூத்தே இ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோளொன்று மாறே.
29
913
ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட
ஒன்றிரண்டு மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே.
30

மேலே செல்க

2. திருஅம்பலச் சக்கரம்
914
இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
1
915
தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.
2
916
அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.
3
917
எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி யாலே.
4
918
மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே.
5
919
ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.
6
920
இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக
இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே.
7
921
மகார நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே.
8
922
நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுவண் முகம்நம சிவாய
ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.
9
923
ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசிவா யயநம சிவா
வாயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டநதத் தடைவிலே.
10
924
அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.
11
925
அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்
அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்
அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே.
12
926
சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே.
13
927
அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஓகாரமது ஐந்தாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.
14
928
பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.
15
929
இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.
16
930
ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.
17
931
அண்ணல் இருப்பது அவள்அக் கரத்துளே
பெண்ணின்நல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.
18
932
அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.
19
933
அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளது
சவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.
20
934
அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.
21
935
கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாமே.
22
936
அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பிய
அத்திசைக் குள்நின்ற நவ்எழுத்து ஓதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே.
23
937
தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிடத்
தானே அளித்ததோர் கல்லொளி யாகுமே.
24
938
கல்லொளி யேயென நின்ற வடதிசை
கல்லொளி யேயென நின்ற னன் இந்திரன்
கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.
25
939
தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே.
26
940
மறைய வனாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திக் காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே.
27
941
ஆகின்ற பாதமும் அந்நாவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயுரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.
28
942
அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.
29
943
பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே.
30
944
ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை
நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.
31
945
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வார்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப்
யாகொன்றி நிற்கும் பராபரன் தானே.
32
946
பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரமாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே.
33
947
நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.
34
948
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.
35
949
கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.
36
950
வெளியில் இரேகை இரேகையி லத்தலை
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரும் கால்கொம்பு நோவிந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவமந் திரமே.
37
951
அகார உகார சிகார நடுவாய்
வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஓகார முதல்வன் உவந்துநின் றானே.
38
952
அற்ற இடத்தே அகாரமது ஆவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே.
39
953
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.
40
954
நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை
யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.
41
955
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்திதந் தானே.
42
956
நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.
43
957
அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே.
44
958
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்துஅகன் றார்களே.
45
959
சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.
46
960
அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறுமந் திரமே.
47
961
விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.
48
962
ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத்தாலே உயிர்பெற லாமே.
49
963
ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.
50
964
விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலையதாம்
சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே.
51
965
ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.
52
966
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.
53
967
வீழ்ந்தெழு லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.
54
968
உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ
எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே.
55
969
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.
56
970
வேரெழத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து
ஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே.
57
971
நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியது
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்டு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.
58
972
இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே.
59
973
ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.
60
974
பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர
நட்டமது ஆடும் நடுவே நிலையங்கொண்டு
அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே.
61
975
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வருமுப் பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.
62
976
நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.
63
977
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே.
64
978
ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.
65
979
மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த போகமும் ஞானமும் ஆகும்
தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே
அருள்தங்கி அச்சிவமம் ஆவது வீடே.
66
980
அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே.
67
981
சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே.
68
982
சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஓகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.
69
983
நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முதல் ஆகும் சதாசிவந் தானே.
70
984
நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.
71
985
கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்
தேடி அதனைத் தெளிந்தறி யீரே.
72
986
எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
73
987
எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.
74
988
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனஇம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே.
75
989
பட்டனம் மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.
76
990
சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடுஒன்று ஆன
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.
77
991
வித்தாம் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொரும்
பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே.
78
992
கண்டெடுந் தேன்கம லம்மலர் உள்ளிடை
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்டழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென வாமே.
79
993
புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.
80
994
ஆறெழுத்தாவது ஆறு மந்திரங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.
81
995
எட்டினில் எட்டறை யிட்டு அறையிலே
கூட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்டு உமாபதி யானுண்டே.
82
996
நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல்
உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே.
83
தம்பனம்
997
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்
துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.
84
மோகனம்
998
கரண இரளிப் பலகை யமன்திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.
85
உச்சாடனம்
999
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே.
86
மாரணம்
1000
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.
87
1001
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே.
88
ஆகர்ஷணம்
1002
எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடு எண்ணாயிரம் வேண்டிலே.
89

மேலே செல்க

3. அருச்சனை
1003
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.
1
1004
சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.
2
1005
அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.
3
1006
எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.
4
1007
நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத் தியம்அனு சந்தான
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும்
மன்னும் மனம்பவ னத்தோடு வைகுமே.
5
1008
வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.
6
1009
அறிவரு ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.
7
1010
இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
மருளறி யாமையும் மன்னும் அறிவு
மருளிவை விட்டெறி யாமை மயங்கும்
மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே.
8
1011
தான்அவ னாக அவனேதான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
தான்அவன் ஆகும்ஓ ராசித்த தேவரே.
9
1012
ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.
10
1013
நமவது ஆசனம் ஆன பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற ஆதி நாடுவது அன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.
11
1014
தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.
12

மேலே செல்க

4. நவகுண்டம்
1015
நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்
நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்
நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே.
1
1016
உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்
நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.
2
1017
மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்
கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது
நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே.
3
1018
கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.
4
1019
எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்லினை கூடகி லாவே.
5
1020
கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.
6
1021
நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும்
நற்சுட ராய்எழு நல்லதென் றாளே.
7
1022
நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதென் றாளையும் கற்றும் வின் வாளே.
8
1023
வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.
9
1024
இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக
நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்
சுகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.
10
1025
முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்
அக்கணன் தானே அகிலமும் உண்டவன்
திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன்
எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே.
11
1026
எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.
12
1027
மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு
நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே.
13
1028
நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே.
14
1029
நின்றஇக் குண்டம் நிலையாது கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளம் என்ன எடுக்கலு மாமே.
15
1030
எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்
கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப்
படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.
16
1031
அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.
17
1032
பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.
18
1033
பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.
19
1034
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தம்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.
20
1035
முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச்
செற்றற்து இருந்தவர் சேர்ந்திருந் தாரே.
21
1036
சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.
22
1037
மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்
உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே.
23
1038
கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தார் யிமூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே.
24
1039
உத்தமன் சோதி உளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.
25
1040
கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.
26
1041
மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்று
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே.
27
1042
பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை
காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.
28
1043
உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.
29
1044
சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே.
30

மேலே செல்க

5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்
1045
மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே.
1
1046
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே.
2
1047
தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையுள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.
3
1048
நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.
4
1049
தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.
5
1050
குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமன்று கேலாத்தின்
கண்டிகை ஆரம் கதிர் முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றானே.
6
1051
நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.
7
1052
தத்துவம் பாரத் தனத்தி சுகோதயள்
வத்துவம் ஆய்ஆ ளும் மாசத்தி மாபரை
அத்தகை யாவும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே.
8
1053
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.
9
1054
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.
10
1055
தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி
ஊன்எங் குள அங்கு உள்ளுயிர்க் காலவன்
வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே.
11
1056
பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
பராசத்தி புண்ணிய மாகிய போகமே.
12
1057
போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
13
1058
கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே.
14
1059
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலையவ ளாமே.
15
1060
தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.
16
1061
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே.
17
1062
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.
18
1063
உணர்ந்துட னேநிறகும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே.
19
1064
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டானே.
20
1065
உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது
வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல முன்றுற மன்னிநின் றாளே.
21
1066
நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்
சென்றான் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே
நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
22
1067
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே.
23
1068
தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூம்பிள்ளை ஆருமாம் ஆதிக்கே.
24
1069
ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரல்
சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே.
25
1070
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆயந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.
26
1071
அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே.
27
1072
ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை
ஊன மறஉணர்ந் தாரஉளத்து ஓங்குமே.
28
1073
ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.
29
1074
தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.
30

மேலே செல்க

6. வயிரவி மந்திரம்
1075
பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே.
1
1076
அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகின்றாளே.
2
1077
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சாரவுழிச் சாரார் கதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.
3
1078
புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே.
4
1079
தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.
5
1080
ஓதிய நந்தி உணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே.
6
1081
சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாகபா சாங்குச
மாலங் லயனறி யாத வடிவுக்கு
மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே.
7
1082
மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.
8
1083
பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.
9
1084
பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர்
ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே.
10
1085
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசக்தி
அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுள் பூசனை யாளே.
11
1086
பூசனை கெந்தம் புனைமலர் மாகொடி
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம்இ லாத மணிமந் திரயோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே.
12
1087
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவிநற் காரணி காணே.
13
1088
காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே.
14
1089
அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரை செய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம் உரைத்தானே.
15
1090
உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.
16
1091
தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத்து இருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை
மேவித்து அழுதொடு மீண்டது காணே.
17
1092
காணும் இருதய மந்திர முங்கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணு நடுஎன்ற அந்தம் சிகையே.
18
1093
சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப்
பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே.
19
1094
வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப்
பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே.
20
1095
பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை
கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக்
கூசியவிந்து வுடன் கொண்டு கூவே.
21
1096
கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.
22
1097
நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.
23
1098
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே.
24
1099
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே.
25
1100
கோலக் குழவி குலாய புருவத்துள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.
26
1101
வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத்
தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே.
27
1102
கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே.
28
1103
தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.
29
1104
வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய கடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே.
30
1105
இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.
31
1106
நாடிகள் மூன்று நடுஎழ ஞானத்துக்
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே.
32
1107
உறங்கும் அளவில் மனோன்மணி வந்து
கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே.
33
1108
உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே
அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே.
34
1109
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே.
35
1110
ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையுள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே.
36
1111
குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத்தலை யாளே.
37
1112
கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.
38
1113
இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.
39
1114
ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே.
40
1115
இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேலி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே.
41
1116
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே.
42
1117
உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.
43
1118
கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே.
44
1119
இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.
45
1120
ஆதி அனாதியும் ஆய பராசக்தி
பாதிபராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே.
46
1121
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன்
ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே.
47
1122
ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடிந் தாளே.
48
1123
வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்
தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே.
49
1124
ஆதி அனாதி அகாரணி காரணி
வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே.
50

மேலே செல்க

7. பூரண சக்தி
1125
அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை
அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.
1
1126
உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சக்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே.
2
1127
கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே.
3
1128
இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பாரசக்தி என்னம்மை தானே.
4
1129
என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று
உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.
5
1130
தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்பதொரு நூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.
6
1131
ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தானதனன் தானே.
7
1132
தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானோர் எழுந்து மதியை விளக்கினள்
தேனார் எழகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.
8
1133
அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரில்
பிரியா அறிவறி வார்உளம் பேணும்
நெறியாய சித்த நிறைந்திருந் தாளே.
9
1134
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப்
பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே.
10
1135
பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு
மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தானே.
11
1136
நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும்
நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே
மற்றன வற்றுள் மருவிடுந் தானே.
12
1137
மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின போது
திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே.
13
1138
சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே.
14
1139
ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.
15
1140
உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடையது வாகிய சாதகர் தாமே.
16
1141
தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது
பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுன
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.
17
1142
பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே.
18
1143
நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.
19
1144
அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகச் தேசெல
முடுக்கும் தாமரை முச்சது ரத்தே.
20
1145
முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே.
21
1146
இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்
பரந்தன வாயு திசை தோறும்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.
22
1147
அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.
23
1148
நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.
24
1149
புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள்
வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே.
25
1150
போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே.
26
1151
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே.
27
1152
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே.
28
1153
தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும் அப்பொருள் தானது தானே.
29
1154
அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே.
30

மேலே செல்க

8. ஆதாரவாதேயம்
1155
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
தானிதழ் ஆனவை நாற்பத்து நாலுள
பாலிதழ் ஆனவள் பங்கய மூலமாய்த்
தானிதழ் ஆகித் தரித்திருந் தாளே.
1
1156
தரித்திருந் தாள்அவள் தண்ணொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.
2
1157
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.
3
1158
வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவிப் பெண் ஆமே.
4
1159
பெண்ணொரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆண்என் பிறப்பறிந்து ஈர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.
5
1160
பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்து
தாச்சற்றெ னுள்புகுந் தாலிக்கும் தானே.
6
1161
ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மணி
பாலித்து உலகில் பரந்துபெண் ஆகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்துநின் றானே.
7
1162
உலந்துநின் நான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடு
உகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்கள் எல்லாம்
உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே.
8
1163
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்துச் சொல்லகில் லேனே.
9
1164
சொல்லஒண்ணாத அழற்பொதி மண்டலம்
சொல்லஒண் னாத திகைத்தங்கு இருப்பர்கள்
வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி
மல்லஒண் ணாத மனோன்மணி தானே.
10
1165
தானே இருநிலம் தாங்கிலிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே.
11
1166
கண்ணுடை யாளைக் கலந்தங்கு இருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணப்
பண்ணுடை யார்கள் பதைப்பற்று இருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.
12
1167
கண்டுஎன் திசையும் கலந்து வருங்கன்னி
பண்டுஎன் திசையும் பராசக்தி யாய்நிற்கும்
விண்டுஎன் திசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டுஎன் திசையும் தொழநின்ற கன்னியே.
13
1168
கன்னி ஒளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசக்தி யாமே.
14
1169
பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாளாகும்
குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.
15
1170
உணர்ந்த உலகு ஏழையும் யோகினி சத்தி
உணர்ந்துஉயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகமது ஆதி
இணைந்து பரமென்று இசைந்துஇது தானே.
16
1171
இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுஅக் கல்வியும் போகமும் ஆகி
மது அக் குழலி மனோன்மணி மங்கை
அதுஅக் கல்வியுள் ஆயுழி யோகமே.
17
1172
யோகநற் சத்தி ஒளிபீடம் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதர நடுவாகும்
யோகநற் சத்திதான் உத்தரந் தேரே.
18
1173
தேர்ந்தெழு மேலாம் சிவன்அங்கி யோடுற
வார்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிட
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.
19
1174
தானான ஆறுஎட்ட தாம்பரைக் குண்மிசை
தானான ஆறும்ஈ ரேழும் சமகலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.
20
1175
தக்க பராவித்தை தானிரு பானேழில்
தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சக்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத் திரையாளே.
21
1176
முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தன்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.
22
1177
கொங்குஈன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தொளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும்அகி லம் கனி
தங்கும் அவள்மனை தான்அறி வாயே.
23
1178
வாயு மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.
24
1179
தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.
25
1180
பத்துமுடை யாள்நம் பராசத்தி
வைத்தனள் ஆறங்க நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள்எம் நேரிழை கூறே.
26
1181
கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறிய ளாய்உல கேழும் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேருயி ராளி பிறிவறுத் தாளே.
27
1182
பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.
28
1183
உள்ளத்தின் உள்ளே உடனிருந்து ஐவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.
29
1184
புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிதிருந் தாளே.
30
1185
இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந்து உன்னி
நிரந்தர மாகிய நிரதி சயமொடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.
31
1186
அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.
32
1187
மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண்டு இந்துவோடு ஈறே.
33
1188
இந்துவின் நின்றொழு நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழு கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும்ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.
34
1189
ஈறது தான்முதல் எண்ணிரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாய் எழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.
35
1190
இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.
36
1191
மங்கையும் மாரனும் தம்மொடு கூடிநின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே.
37
1192
சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே.
38
1193
பாவித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்து மேலது முத்தது வாமே.
39
1194
முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுளம் மேவிநின் றாளே.
40
1195
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தள்மதி யங்கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள்ளொளி யாமே.
41
1196
உள்ளொளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதை கலந்துடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.
42
1197
கொடியதுஇ ரேகை குருவுள் இருப்பப்
படியது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.
43
1198
ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.
44
1199
சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.
45
1200
ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்றுஓதி நினையவும் வல்லார்க்குக்
காரேர் குழலி கமல மலரன்ன
சீரேயும் சேவடி சிந்தைவைத் தாளே.
46
1201
சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவதிலே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதி செய் வீரே.
47
1202
சமாதிசெய்வார்கட்குத் தான் முத லாகிச்
சிவாதியி லாரும் சிலைநுத லாளை
நவாதியி லாக நயந்தது ஓதில்
உவாதி அவளுக்கு உறைவில தாமே.
48
1203
உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதினைப் போதினில் எய்திடலாமே.
49
1204
எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றி கருத்துறும் வாறே.
50
1205
கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி இருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.
51
1206
ஆமையொன்று ஏறி அகம்படி யான்என
ஓம்என்று ஓதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலக் கண்டபின்
சோம நறுமலர் சூழநின் றாளே.
52
1207
சூடிடும் அங்குச பாசத் துளைவழி
கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபத நன்னெடு ருத்திரம்
ஆடிடும் சீர்புனை ஆடக மாமே.
53
1208
ஆயமன் மால்அரன் ஈசன் சதாசிவன்
தாமடி சூழநின்று எய்தினார் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே.
54
1209
சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞானம் உருவநின்று
ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே.
55
1210
அண்டமுதலாய் அவனிபரி யந்தம்
கண்டதுஒன்று இல்லைக் கனங்குழை அல்லது
கண்டதும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத ளாலே.
56
1211
ஆலம்உண் டான்அமுது ஆங்கவர் தம்பதம்
சாலவந்து எய்தும் தவத்துஇன்பம் தான்வரும்
கோலிவந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏலவந்து ஈண்டி இருந்தனள் மேலே.
57
1212
மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின்று ஏத்திநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினள் ஆமத்தி னாளே.
58
1213
ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம் நமசிவ என்றுஇருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.
59
1214
நிலாமய மாகிய நீள்படி கத்தின்
சிலாமய மாகும் செழுந்த ரளத்தின்
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.
60
1215
கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர் கற்பனை எல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.
61
1216
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனள்
மாலின் மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் தாமே.
62
1217
பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
நாகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.
63
1218
நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடிநின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உளஅவை
வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்று
ஆதியும் அந்தமும் ஆகிநின் றாளே.
64
1219
ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே.
65
1220
ஆயிழை யாளொடும் ஆதிப் பரமிடம்
ஆயதொர் அண்டவை யாறும் இரண்டுள
ஆய மனந்தொறு அறுமுகம் அவைதனில்
ஏயவார் குழலி இனிதுநின் றாளே.
66
1221
நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழு உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் ஓதி உணர்ந்துநின் றாளே.
67
1222
உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழும் ஆங்கதி யாகிய தாகும்
குணந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.
68
1223
ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டல மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகையங்கு இருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.
69
1224
ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடுஅப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.
70
1225
தானிகழ் மோகினி சார்வண யோகினி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம்
தானாம் பரசிவம் மேலது தானே.
71
1226
தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே.
72
1227
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே.
73
1228
நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரான்அறிவு அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்கம் ஆமே.
74
1229
சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்க தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்க தேவியும் சத்தியென் பாளே.
75
1230
சத்தியம் நானும் சயம்புவம் அல்லது
முத்தியை யாரும் முதல்அறி வாரில்லை
அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே.
76
1231
அதுஇது என்றுஅவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே..
77
1232
வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.
78
1233
ஓர்ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரன் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதமிது சத்திய மாமே.
79
1234
சத்தியி னோடு சயம்புவம் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.
80
1235
திருந்துசிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த
அருந்திட அவ்விடம் ஆரமுது ஆக
இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே.
81
1236
என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்றது ஆகுவர் தார்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.
82
1237
நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே.
83
1238
தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்தரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
கான்றது வாகுவர் தாம்அவள் ஆயுமே.
84
1239
ஆயும் அறிவும் கடந்தணு ஆரணி
மாயம தாகி மதோமதி ஆயிடும்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம தாநெறி யாகிநின் றாளே.
85
1240
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.
86
1241
ஆம்அயன்மால் அரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் ஆளும் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.
87
1242
வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.
88
1243
நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்துஎரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.
89
1244
தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாள்அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.
90
1245
பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.
91
1246
விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கத்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.
92
1247
தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே.
93
1248
உருவம் பலஉயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில்
புரிவளைக் கைச்சிஎம் பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.
94
1249
மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலநதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியும் ஆமே.
95
1250
உணர்ந்துஒழிந் தேன்அவன் னாம் எங்கள் ஈசனை
புணர்ந்துஒழிந் தேன்புவ னாபதி யாரை
அணைந்துஒழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்துஒழிந்த தேன்தன் அருள்பெற்ற வாறே.
96
1251
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.
97
1252
தனிநா யகன்த னோடுஎன்நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழுலகு என்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியாய் நினைவதென் காரணம் அம்மையே.
98
1253
அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்றும்
இம்மனை செய்த இன்னில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்து நின்றானே.
99
1254
அம்மையும் அத்தவனும் அன்புற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை
அம்மையொடு அத்தனும் யானும் உடனிருந்து
அம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே.
100

மேலே செல்க

9. ஏரொளிச் சக்கரம்
1255
ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழு நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.
1
1256
வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெரும் சக்கரம்
வன்னி எழுத்திடு வாறுஅது சொல்லுமே.
2
1257
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்எழுத் தாவன
சொல்லிடும் நூறொடு நாற்பத்து நாலுரு
சொல்லிரு சக்கர மாய்வரு மேலதே.
3
1258
மேல்வரும் விந்துவும் அவ்எழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்எழுத் தேவரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.
4
1259
ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்தது எழுத்தே.
5
1260
விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.
6
1261
அப்பஅது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ்அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.
7
1262
ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்தவை
ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறிமினே.
8
1263
அறிந்திடும் சக்கரம் ஐ அஞ்சு விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்எழுத்து அப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை யாமே.
9
1264
அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
அம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இம்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இம்முதல் ஆகும் எழுத்தலை எல்லாம்.
10
1265
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே.
11
1266
அந்தமும் ஈறு முதலா னவையற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே.
12
1267
ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபதும்
ஆவினம் அப்பதின் ஐந்தின மாயுறும்
ஆவினம் அப்பதி னெட்டுடன் ஆயுறும்
ஆவினம் அக்கதி ரோன்வர வந்தே.
13
1268
வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்
வந்திடு நாளது முந்நூற் றறுபதும்
வந்திடு ஆண்டு வகுத்துறை அவ்வியே.
14
1269
அவ்வின மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
எவ்வின மூன்றும் கிளர்தரு ஏறதாம்
சவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வின மூன்றும் இராகிகள் எல்லாம்.
15
1270
இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுள் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே.
16
1271
நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.
17
1272
தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.
18
1273
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தன ஒத்தபின்
கண்டிரும் அப்புறம் காரொளி யானதே.
19
1274
காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.
20
1275
நின்றது அண்டமும் நீளும் புலியெலாம்
நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட
நின்றவிவ் வண்டமு மூல மலம்ஒக்கும்
நின்றஇவ் வண்டம் பலமது விந்துவே.
21
1276
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.
22
1277
வீசம் இரண்டுள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.
23
1278
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்தும் அளவினில்
விரிந்தது உட்கட்ட எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது வாமே.
24
1279
விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தானே.
25
1280
விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.
26
1281
மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள்ளெழுத்து ஒன்றுஎரி வட்டமாம்
தந்திரத் துள்ளும்இ ரேகையில ஒன்றில்லை
பந்தமது ஆகும் பிரணவம் உன்னிடே.
27
1282
உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்டுஎழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே.
28
1283
பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் கடமெங்கும்
நோக்கலும் ஆகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்குலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே.
29
1284
அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேலெழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே.
30
1285
கூறிய சக்கரத்து உள்ளெழு மந்திரம்
ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.
31
1286
மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும்
மதித்தங்கு எழுந்தவை காரணம் ஆகில்
கொதித்தங்கு எழுந்தலை கூடகி லாவே.
32
1287
கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.
33
1288
தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளித்த அகாரத்தை அந்நாடு வாக்கிக்
குளிர்ந்த அரவினைக் கூடியுள் வைத்து
வளிந்தவை அங்கெழு நாடிய காலே.
34
1289
கால்அரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித்து எழுந்துஅமைந்து ஊறி எழுந்தாய்ப்
பாலித்து எழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.
35
1290
கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டையுள் நாவில் பகையற விண்டபின்
மன்று நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நமஎனே.
36

மேலே செல்க

10. வயிரவச் சக்கரம்
1291
அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்தஅச் சத்தமி மேல்இவை குற்றம்
அறிந்துஅவை ஒன்றுவிட்டு ஒன்றுபத் தாக
அறிந்து வலமது வாக நடவே.
1
1292
நடந்து வயிரவன் சூல கபாலி
நடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே.
2
1293
ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.
3
1294
கையவை யாறும் கருத்துற நோக்கிடும்
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்கு மெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.
4
1295
பூசனை செய்யப் பொருந்துஓர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆகுமாம்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.
5
1296
வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.
6

மேலே செல்க

11. சாம்பவி மண்டலச் சக்கரம்
1297
சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேல்தாங்
காண்பதம் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.
1
1298
நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடறி வீதியும் தொடர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
ஏடற நால்ஐந்து இடவகை யாமே.
2
1299
நால்ஐந்து இடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலுநற் கோணமும் நந்நால் இலிங்கமாய்
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.
3
1300
ஆறிரு பத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.
4
1301
குறைவதும் இல்லை குரைகழற் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்எழுத்து ஆகித்
திறமது வாகத் தெளியவல் லார்க்கு
இறவில்லை என்றென்று இயம்பினர் காணே.
5
1302
காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணும் கனகமும் காரிகை யாமே.
6
1303
ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேயாகப்
போமே அதுதானும் போம்வழியே போனால்
நாமே நினைத்தனை செய்யலு மாகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.
7
1304
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.
8
1305
ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலும் மதியதி
ஊனும் உயிரும் உணர்வது வாமே.
9
1306
உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
அணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும்
குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும் அக் காமுகை யாலே.
10

மேலே செல்க

12. புவனபதி சக்கரம்
1307
ககராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அரத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தான்சுத்த வெண்மை
ககராதி மூவித்தை காமிய முத்தியே.
1
1308
ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண மனம்இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயம் தானே.
2
1309
ஏக பராசக்தி ஈசற்குஆம் அங்கமே
யாகம் பராவித்தை யாமுத்தி சித்தையே
ஏகம் பராசக்தி யாகச் சிவகுரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.
3
1310
எட்டா கியசத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகு நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது
ஒட்டாத விந்துவும் தானற்று ஒழிந்தது
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே.
4
1311
ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிட்டே.
5
1312
சட்கோணம் தன்னில் ஸ்ரீம்ஹிரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்ரீங் கராமிட்டு
எக்கோண மும்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீர்எட்டு அக்கரம் அம்முதல் மேலிடே.
6
1313
இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்ட.வ் விட்டதின்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத்துஆங்கு கிரோங் கென்று மேவிடே.
7
1314
மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை அடையவே குரோங்கிரோங் கென்றிட்டுத்
தாவில் ரீங் காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப் பின் பூசியே.
8
1315
பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியானம் அதுசெய்யே.
9
1316
செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும்
கையிற் படைஅங் குசபாசத் தோடபய
வெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி
துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே.
10
1317
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்பே னகமந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால நாரதா யாசுவா காஎன்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே.
11
1318
சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாகனத்தால்
பாவித்து இதய கமலத்தே பதிவித்துஅங்கு
யாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேவி நினைந்தது தருமே.
12

மேலே செல்க

13. நவாக்கரி சக்கரம்
1319
நவாக்கரி சக்கரம் நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீ சௌமுதல் ஈறே.
1
1320
சௌமுதல் அவ்வொரு ஹெளட னாங்கிரீம்
கௌவுள் உடையுளும் கலந்திரீம் கிரீமென்று
ஒவ்வில் எழுங்கிலி மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாய நமஎன்னே.
2
1321
நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.
3
1322
நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மை விட்டோடும்
சிரந்தரு தீவினை செய்வது அகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடும் காணே.
4
1323
கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.
5
1324
நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடும் நெல்லொடு புல்லினை யுள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.
6
1325
நேர்தரும் அத்திரு நாயகி ஆனவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.
7
1326
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.
8
1327
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.
9
1328
அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றடு வீரே.
10
1329
நாபணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும் ஹிரீ முன்ஸ்ரீமீறாந்
தாரணி யும் புகழ்த் தையல் நல் லாள்தன்னைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே.
11
1330
கண்டுகொள் ளும் தனி நாயகி தன்னையும்
மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.
12
1331
பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தானிலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே.
13
1332
கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.
14
1333
சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின்று ஏத்துவர்
பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.
15
1334
ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை
மைம்முத லாக வழுத்திடு நீயே.
16
1335
வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்
பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே.
17
1336
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.
18
1337
மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங்கு இருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
நல்லியல் பாலே நடந்திடுந் தானே.
19
1338
நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்
நடந்திடும் கல்விக் கரசிவ ளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.
20
1339
பகையில்லை கௌமுத லயது வீறா
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுறு எல்லாம்
வகையில்லை யாக வணங்கிடம் தானே.
21
1340
வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம்
நலங்கிடும் காம வெகுளி மயக்கந்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.
22
1341
தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.
23
1342
ஆமே அமைத்துயிராகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே.
24
1343
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங்கு இருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.
25
1344
தானது கிரீம் கௌவது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெல்லாம்
கானது கன்னி கலந்த பராசக்தி
கேளது வையங் கிளரொளி யானதே.
26
1345
ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.
27
1346
அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
எறிந்திடும் வையத்து இடரவை காணின்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.
28
1347
புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாம்
குகையில்லை கொல்வது இலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.
29
1348
சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.
30
1349
ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப்
பணிவது பஞ்சாக் கரமது வாமே.
31
1350
ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத்துள் அறி வானவள்
ஆமே சுவைஒளி ஊறுஓசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுளும் ஆமே.
32
1351
தன்னுளும் ஆகித் தரணி முழுதுங்கொண்டு
என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே.
33
1352
காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்துள் இருந்திடின்
காணலும் ஆகும் கலந்து வழிசெயக்
காணலும் ஆகும் கருத்துற நில்லே.
34
1353
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.
35
1354
மெய்ப்பொருள் ஔமுதல் ஹௌவது ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேஸ்வரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.
36
1355
தாளதின் உள்ளே சமைந்தமு தே.வரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.
37
1356
கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற்று இடத்துக்கே.
38
1357
உற்றிடம் எல்லாம் உலப்பில்பா ழாக்கிக்
கற்றிடம் எல்லாம் கடுவெளி யானது
மற்றிடம் இல்லை வழியில்லை தானில்லைச்
சற்றிடம் இல்லை சலிப்பற நின்றிடே.
39
1358
நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.
40
1359
விளக்கொளி ஸௌமுதல் ஔவது ஈறா
விளக்கொளி சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யானை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.
41
1360
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
42
1361
தானே வெளியென எங்கும் நிறைந்தவன்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவன்
தானே அனைத்துள அண்ட சகலமே.
43
1362
அண்டத்தி னுள்ளே அளப்பரி யானவன்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவன்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே.
44
1363
கலப்பறி யார்கடல் சூழ்உலகு எல்லாம்
உலப்பறி யாருடல் ஓடுயிர் தன்னைச்
சிலப்பறி யார்சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.
45
1364
தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வறை எண்பத் தொன்றுமே.
46
1365
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தலை பச்சையே.
47
1366
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுள் கலந்துடன் ஓமமும்
ஆம்தலத்து ஆமுயிர் ஆகுதி பண்ணுமே.
48
1367
பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென நேயநற் நோக்கலும் ஆமே.
49
1368
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.
50
1369
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.
51
1370
சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு
முந்தை கிலீம்எழ முன்னிருந் தாளே.
52
1371
இருந்தனர் சத்திகள் அறுபத்தி நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்சூழ வில்லம்பு கொண்டே.
53
1372
கொண்ட கனகம் குழைமுடி யாடையாய்க்
கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரிதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி உணரவல் லாருக்கே.
54
1373
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்திருந்து எங்கும் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை ஒளியது காணும்
தணந்தெழு சக்கரம் தான்தரு வாளே.
55
1374
தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகும் குணங்களுள் நின்று
கருவழி யாகும் கணக்கை அறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே.
56
1375
பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.
57
1376
பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.
58
1377
மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவள் அன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே.
59
1378
பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படிச் சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் சிறீம்தன மாமே.
60
1379
தனமது வாகிய தையலை நோக்கி
மனமது ஓடி மரிக்கிலோர் ஆண்டில்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்திய தாமே.
61
1380
ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.
62
1381
ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத்து அறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத்து அறுசத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழவே.
63
1382
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்
ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.
64
1383
பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உள்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுதல் ஆகுமே.
65
1384
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.
66
1385
மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தை
கண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே.
67
1386
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து
ஓங்கி எழுங்கலைக்கு உள்ளுணர் வானவள்
ஏங்க வரும்பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.
68
1387
நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.
69
1388
அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டுஅங்கு இருந்தவர் காரணி காணுமே.
70
1389
காரணி சத்திகள் ஐம்பத்து இரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத்து இருவராய்க்
காரணி சக்கரத்து உள்ளே கரந்தெங்கம்
காரணி தன்னருள் ஆகிநின் றாளே.
71
1390
நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினில் ஆடும் மணியது காணுமே.
72
1391
கண்ட இச்சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை அறுத்திட
இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே.
73
1392
இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்
கரந்திடு கேடதும் வில்லம்பு கொண்டங்கு
குரந்தங்கு இருந்தவள் கூத்துகந் தாளே.
74
1393
உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச்சு அணிந்து
தழைந்தங்கு இருந்தவள் தான்பச்சை யாமே.
75
1394
பச்சை இவளுக்கு பாங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கூச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச இடைச்சி இனிதிருந் தாளே.
76
1395
தாளதின் உள்ளே தாங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்து 'கம் ஜம்' என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.
77
1396
விண்ணமர் நாபி இருதயம் ஆங்கிடைக்
கண்ணமர் கூபம் கலந்து வருதலால்
பண்ணமர்ந்து ஆதித்த மண்டல மானது
தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.
78
1397
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தனநாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.
79
1398
சூலம்தண்டு ஓள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.
80
1399
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்
எண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.
81
1400
கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்து பவளம்கச் சாகப்
படர்ந்தல்குல்பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.
82
1401
நின்ற இச்சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்
பண்டைய ஆனின் பகட்டை அறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்குண் டாமே.
83
1402
உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறும் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே.
84
1403
நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே.
85
1404
பூசனைச் சத்திகள் எண்ஐவர் சூழவே
நேசவன் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்
காசினைச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.
86
1405
தாரத்தின் உள்ளே தங்கிய சோதியைப்
பாரத்தின் உள்ளே பரந்து எழுந்திட
வேரது ஒன்றிநின்று எண்ணு மனோமயம்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே.
87
1406
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நமவென்று
கண்ணில் எழுந்தது காண்பரிது அன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே.
88
1407
என்றுஅங்கு இருந்த அமுத கலையிடைச்
சென்றுஅங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம்இரு வெள்ளிபொன் மண்ணடை
கொண்டங்கு இருந்தது வண்ணம் அமுதே.
89
1408
அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுதம தாகிய கேடிலி தானே.
90
1409
கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும்
பூவிலி பூவிதழ் உள்ளே இருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.
91
1410
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருகைக்கு
விண்டஔ காரம் விளங்கின அன்றே.
92
1411
விளங்கிடு வானிடை நின்றலை எல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துக்
கணங்கிடை நின்றவை சொல்லலும் ஆமே.
93
1412
ஆமே ஆதோமுக மேலே அமுதமாய்த்
தாமே உகாரம் தழைத்தெழும் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.
94
1413
பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலம் தன்னுள்ளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.
95
1414
பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மானத அவளுக்கு மண்ணும் திலகமாய்
கோதையர் சூழக் குவிந்திங் காணுமே.
96
1415
குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்திதழ் ஆகிய பங்கயத் துள்ளே
இருந்தனள் காணும் இடம்பல கொண்டே.
97
1416
கொண்டங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால்
இன்றுஎன் மனத்துள்ளே இல்லடைந்து ஆளுமே.
98
1417
இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை
இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வர்
இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே.
99
1418
ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.
100
திருச்சிற்றம்பலம்
நான்காம் தந்திரம் முற்றிற்று

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com